
புன்ச்சாக் ஆலாம், மார்ச்-28- வாடிக்கையாளர்கள் 3 நிமிடங்களுக்கு முன்பே தங்களின் இரமலான் நோன்பைத் திறக்கும் அளவுக்கு, தவறுதலாக மக்ரிப் தொழுகையை ஒலிபரப்பியதற்காக, உள்ளூர் கோழிப் பொரியல் கடையான DarSA Fried Chicken-னின் புன்ச்சாக் ஆலாம் கிளை மன்னிப்புக் கோரியுள்ளது.
மார்ச் 17-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில் இரவு 7.26 மணிக்கே மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை ஒலிபரப்பி விட்டோம்; உண்மையில் அன்று நோன்பு திறக்கும் நேரம் இரவு 7.29 மணியாகும்.
இதனால் அவர்களின் அன்றைய நோன்பு செல்லாமல் போயிருக்கின்றது; எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தவறவிட்ட நோன்பு நாளை பின்பு ஈடுகட்டி விடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இது எங்களால் நடந்த தவறு, அதற்கு வருந்துகிறோம்; தவற்றை சுட்டிக் காட்டிய வாடிக்கையாளர்களுக்கும் இவ்வேளையில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம் என DarSA அறிக்கையில் கூறியது.
“இனியும் இது போன்ற தவறுகள் நடக்கா வண்ணம், உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்; தொழுகை அழைப்பு ஒலியை JAKIM வெளியிட்ட நேர அட்டவணைக்குகேற்ப சரிசெய்துள்ளோம்.” என அவ்வறிக்கை மேலும் கூறியது.
அக்கடையின் தவற்றால், தங்களின் ஒரு நாள் நோன்பு வீணாகி விட்டதாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் முன்னதாக சமூக ஊடகங்களில் அதிருப்தியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.