
ஷா அலாம், ஏப் 28 – ஏப்ரல் 26ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் ஷா அலாம் வட்டாரத்திலுள்ள நகைக்கடையில் நகை வாங்கும் வாடிக்கையாளர்களைப் போல் நடித்த இரண்டு தனிப்பட்ட நபர்கள் 100,000 ரிங்கிட்டிற்கும் மேலான நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர்.
இரண்டு தங்க மோதிரங்கள், கைகளில் அணியக்கூடிய மூன்று தங்க சங்கிலிகள் ஆகியவை கொளையடிக்கப்பட்ட நகைகளில் அடங்கும்.
244.08 கிரேம் எடையைக் கொண்ட குறைந்தது 111,743 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார்.
ஒர் ஆடவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் பார்வையிடுவதற்காக மேலும் நகைகளை கேட்டதால் அதனை நகைக்கடை ஊழியர் ஒருவர் கண்ணாடி பேழைக்குள் இருந்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த இருவரும் தாங்கள் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
அந்த நகைக்கடையின் CCTV கேமராவில் பார்த்தபோதுதான் அவர்கள் நகைகளுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் இக்பால் கூறினார்.
அந்த இரு சந்தேகப் பேர்வழிகளில், ஆடவர் ஒருவர் சிவப்பு தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடியை அணிந்திருந்த வேளையில் , பெண் சந்தேகப் பேர்வழி வெள்ளை நிறத் தொப்பியையும் முகக் கவசத்தையும் அணிந்திருந்ததாக அவர் தெரிவித்தார்