Latestமலேசியா

விசுவாசத்தைப் பற்றி நீங்கள் பேசுவதா? கெடா அம்னோவுக்கு மாநில ம.இ.கா தலைவர் சுரேஷ் காட்டமான கேள்வி

அலோர் ஸ்டார், ஆகஸ்ட்-10 – புதியக் கூட்டாளி கிடைத்ததும் பழையக் கூட்டாளியை நட்டாற்றில் விட்ட கெடா அம்னோவுக்கு, கூட்டணி விசுவாசத்தைப் பற்றி பேச கொஞ்சமும் தகுதி இல்லையென, மாநில ம.இ.கா காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

காலங்காலமாக பரம விரோதியாக இருந்த DAP-யுடன், ஆட்சி அதிகாரத்திற்காக இன்று ஒட்டி உறவாடும் அம்னோவெல்லாம், ம.இ.காவின் விசுவாசத்தை கேள்வி எழுப்புவது ஏற்புடையது அல்ல என, கெடா ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர் S.K.சுரேஷ் கூறினார்.

இன்றைய அம்னோ தலைவர் Dato’ Seri Dr Ahmad Zahid Hamidiயை சிறைக்கு அனுப்பத் துடித்தது DAP. சிறையிலிருக்கும் முன்னாள் தலைவர் Dato’ Sri Najib Razak கிற்கு பொது மன்னிப்புக் கிடைப்பதை எதிர்த்ததுவும் DAP தான்.

ஆனால் இன்று அவர்களுடன் அம்னோ உறவாடுகிறது.

DAP-யுடன் நெருக்கம் ஏற்பட்டதும், அதுவரை கஷ்ட நஷ்டங்களில் உடன் இருந்த ம.இ.காவையும் ம.சீ.சவையும் அம்னோ உதாசீனப்படுத்தி ஓரங்கட்டியதை நீங்கள் மறந்திருக்கலாம்; நாங்கள் மறக்க மாட்டோம் என சுரேஷ் நினைவுப்படுத்தினார்.

அம்னோவைச் சேர்ந்த அமைச்சர் Tengku Datuk Seri Zafrul பி.கே.ஆருக்கு கட்சித் தாவியுள்ளார்; அவரின் விசுவாசத்தை கேட்கத் தைரியமில்லாமல் ம.இ.காவைப் பற்றி பேசுவது நகைப்புக்குரியது.

ம.இ.கா தன்மானமுள்ள கட்சி; அதன் எதிர்காலத்தை முடிவுச் செய்ய யாரிடமும் கைக் கட்டி நிற்க வேண்டியதில்லை.

ம.இ.காவை சீண்டுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என சுரேஷ் கடுமையாக எச்சரித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஒத்துழைக்க வலியுறுத்தி கெடா ம.இ.கா தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து, கெடா அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் Shaiful Hazizy Zainol Abidin ம.இகாவின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல்களின் போது பேரம் நடத்துவதற்கும், இக்கட்டான நேரத்தில் திருப்பிக் கேட்பதற்கும் விசுவாசம் ஒன்றும் விளையாட்டல்ல என அவர் தாக்கியிருந்தார்.

அதற்கு பதிலடியாக சுரேஷ் இவ்வறிக்கையை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!