
சென்னை, மார்ச்-31-தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரில் போட்டியிடும் TVK எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சத்தியப்பிரமாணத்தில், 400 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துகளை அறிவித்துள்ளார்.
அவரின் சொத்துகளில் வீடுகள், நிலங்கள், வணிக முதலீடுகள், வங்கி சேமிப்புகளும் அடங்கும்.
404.58 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் பல்வேறு வங்கிக் கணக்குகளில் சேமிப்புகளாக மட்டும் 370 கோடி ரூபாயும் வைத்திருப்பதாக அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியமாக, விஜயின் தந்தை, தாய், மனைவி, மகன், மகள் என ஒரு குடும்பமே தன்னிடம் கடன் வாங்கியிருப்பதாகவும் சத்தியப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் 3.02 கோடி ரூபாய் கடனையும், தாயும் பிரபல பாடகியுமான ஷோபா சேகர் 87 லட்சம் ரூபாய் கடனையும் விஜயிடம் வாங்கியுள்ளனர்.
விவாகரத்துக் கோரியுள்ள மனைவி சங்கீதா 12.60 கோடி ரூபாயும், மகன் ஜேசன் சஞ்சய் 8 லட்சம் ரூபாயும், மகள் திவ்யா சாசா 4.60 லட்சம் ரூபாயும் கடன் வாங்கியுள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, சொந்த குடும்பத்தில் அனைவருமே தனக்குக் கடனாளிகளாக இருப்பதாக அவர் காட்டியுள்ளது சமூக ஊடகத்தில் பேச்சுப் பொருளாகியுள்ளது.
இவ்வேளையில், மொத்தமாக 3.44 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக வேட்புமனுவில் விஜய் தெரிவித்திருப்பதும் கவனம் பெறுகிறது.
2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய், பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்; திருச்சி கிழக்குத் தொகுதியில் பின்னர் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயின் இந்த சொத்து விவரங்கள், தேர்தல் பிரசாரத்தில் குறிப்பாக மற்ற வேட்பாளர்களின் முக்கிய ஆயுதமாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



