விமானத்திற்குள் திருடிய ஆடவருக்கு 10 மாதம் சிறை

சிங்கப்பூர், ஜூலை 31 – கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கான சேவையில் ஈடுபட்டிருந்த Scoot விமானத்திற்குள் பயணிக்கு சொந்தமான Debit கார்டு மற்றும் ரொக்கத் தொகையை திருடிய குற்றத்திற்காக சீன பிரஜை ஒருவனுக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி எடி தாம் ( Eddy Tham ) முன்னிலையில் கொண்டு வரப்பட்ட திருட்டுக் குற்றத்தை 35 வயதுடைய அந்த ஆடவன் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அந்நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றங்களில் மற்றவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு ஒரு செய்தியாக இந்த தண்டனை அமைவதாக தீர்ப்பளித்தபோது நீதிபதி தெரிவித்தார்.
அந்த ஆடவனின் நண்பரான 41 வயதுடைய மற்றொரு நபர் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. எனினும் அந்த நபர் மீதான வழக்கு விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது . அவர்கள் இருவரும் கடந்த மே 31ஆம் தேதி சீனாவிலிருந்து மலேசியா வந்தடைந்ததோடு , சிங்கப்பூருக்கு சென்ற பின்னர் மற்றொரு விமானம் மூலம் ஹங்காங் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாக ஊடகம் ஒன்றில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.
பயணிகளின் இருக்கைக்கு மேலே உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த மலேசிய பெண்ணுக்கு சொந்தமான பேக்கிலிருந்து இரண்டு Debit கார்டுகள் மற்றும் 169 சிங்கப்பூர் டாலரையும் ஜூன் 2ஆம் தேதி அவர்கள் திருடியதாக கூறப்பட்டது.