
ஜகார்த்தா, ஜனவரி 8 – இந்தோனேசியாவில், 23 வயதுடைய ஒரு பெண், விமானப் பணிப்பெண் போல உடை அணிந்து Batik Air விமானத்தில் பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Palembang-கிலிருந்து Jakarta செல்லும் வழித்தடத்தில் பயணம் செய்த அவர், தன்னை விமானக் குழு உறுப்பினர் என கூறி, ஊழியர்களுக்கான நுழைவு வழியை பயன்படுத்தி விமானத்துக்குள் சென்றார். அவர் உண்மையில் சாதாரண பயணியாக டிக்கெட் வாங்கியிருந்தது பின்னர் தெரியவந்துள்ளது.
விமான ஊழியர்களின் கேள்விகளுக்கு அவர் தெளிவான பதில்கள் அளிக்காததால் சந்தேகம் எழுந்தது. விமானம் Soekarno-Hatta விமான நிலையத்தை வந்தடைந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண் முன்பு விமானப் பணிப்பெண் பணிக்கு விண்ணப்பித்து தோல்வியடைந்ததாகவும், குடும்பத்தாரிடம் வேலை கிடைத்தது போல காட்டவே இப்படிச் செய்ததாகவும் தெரியவந்தது. அவர் அணிந்திருந்த உடை ஆன்லைனில் வாங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.



