
பெய்ஜிங், மார்ச்-29- ஹரி ராயாவை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சீனா, பெய்ஜிங்கில் வசிக்கும் ஒரு மலேசிய தம்பதியர் 5,500 கிலோ மீட்டர் தரைவழிப் பயணத்தைத் தேர்ந்தெடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பலருக்கு இது ஒரு ‘விந்தையாகத்’ தெரியலாம்.
பேசாமல் வெறும் 6 மணி நேரப் பயணத்தில் பெய்ஜிங்கிலிருந்து கோலாலம்பூருக்கான நேரடி விமானத்தில் அவர்கள் வந்திருக்கலாம் தான்.
ஆனால் 36 வயது இசா சுபிர் (Isa Zubir) மற்றும் அவரின் 34 வயது மனைவி அய்ன் ரொஸ்லி (Ain Rozli) இருவரும், 5-நாள் இரயில் பயணத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர்.
அவ்வகையில் அந்த சீன தலைநகரிலிருந்து மார்ச் 21-ஆம் தேதி, யூனான் பிரதேசத்தின் குன்மிங் வரை 14 மணி நேர அதிவேக இரயில் பயணத்தைத் தொடங்கினர்.
அங்கிருந்து லாவோஸ் நாட்டுக்கு இரயில் மாறி, பிறகு தாய்லாந்தின் பேங்கோக் சென்று, கடைசியாக சொந்த ஊரான பேராக், ஈப்போ வந்தடைந்தனர்.
5,500 கிலோ மீட்டர் தாண்டி 5 நாள் பயணமாக அதுவும் இரமலான் நோன்பு மாதத்தில் பயணப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு பயணிப்பது பலருக்கு ‘பைத்தியக்காரத்தனமாகத்’ தெரியலாம்; மிகுந்த களைப்பு தான், ஆனால் இது ஒரு விலைமதிப்பில்லா மறக்க முடியாத அனுபவம் என இருவரும் சிரித்துக் கொண்டே கூறினர்.
பெய்ஜிங்கில் ஓர் ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் இசா, இந்த இரயில் பயணத்தை ஒரு கனவு நனவான கதையாக விவரித்தார்;
காரணம், அவர் நீண்ட காலமாகவே இந்த நாடுகளைக் கடந்து தரைவழியாகப் பயணிக்க விரும்பினார், ஆனால் அது தனது ஹரி ராயா ‘பாலேக் கம்போங்’ பயணத்தின் ஒரு பகுதியாக இருக்குமென தாம் நினைத்துப் பார்க்கவில்லை என்றார் அவர்.
5- நாள் இரயில் பயணத்திற்கு உடல் ஒத்துழைக்க ஏதுவாக, வழக்கமாக உட்காரும் இருக்கைகளையும், தூங்கிக் கொண்டே செல்லும் படுக்கை இருக்கைகளையும் இவர்கள் ‘புத்திசாலித்தனமாக’ மாறி மாறி முன்பதிவுச் செய்துள்ளனர்.
கடந்தாண்டு பிப்ரவரி முதல் சீனாவில் தங்கியுள்ள இசாவும் அவரது மனைவியும், ஒரு மாதத்திற்கு முன்பே இணையம் வாயிலாக இரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவுச் செய்து விட்டனர்.
இந்த ‘சாகச’ பயணத்தால் இவ்வாண்டு ஹரி ராயா கொண்டாட்டம் மேலும் சிறப்புக்குரியதாகி இருப்பதாக அவர்கள் வருணித்தனர்.
ஹரி ராயா விடுமுறை முடிந்து கணவனும் மனைவியும் விமானம் வழியாக ஏப்ரல் 10-ஆம் தேதி சீனா புறப்படுகின்றனர்