
கோலாலம்பூர், ஏப்ரல்-19- சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சர் எம். குலசேகரன் நேற்று இந்தியாவின் ஜவுளித் துறை அமைச்சர் பபித்ரா மார்கரீத்தாவுடன் சந்திப்பு நடத்தினார்.
தலைநகரில் நடைபெற்ற அச்சந்திப்பில், மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் பி.என்.ரெட்டி, துணை உயர் ஆணையர் சுபாஷினி நாராயணன், மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியில் சங்கங்களின் சம்மேளனத்தின் உதவித் தலைவர் டத்தோ நாதன் கே. சுப்பையா, சொக்சோ முதலீட்டு குழுவின் உறுப்பினர் கண்ணன் தங்கராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரு வழி உறவை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு விவகாரங்கள் அதன் போது விவாதிக்கப்பட்டன.
இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் மலேசிய ஜவுளிப் பொருட்கள் மீதான வரி, இந்தியாவுக்கு வர்த்தகச் சுற்றுலா மேற்கொள்ளும் மலேசிய வர்த்தகர்களுக்கு, விசா தேவைகளிலிருந்து விலக்களிக்கும் சாத்தியம் உள்ளிட்டவையும் அவற்றிலடங்கும்.
கலந்தாய்வு நல்ல பலனைத் தந்திருப்பதாகக் கூறிய குலசேகரன், இங்குள்ள இந்திய உயர் ஆணையத்துடன் மேற்கொண்டு விவாதிக்கப்படுமென்றார்.
இவ்வேளையில், ITEC எனப்படும் இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புப்பின் கீழ் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள மலேசியர்களுக்குக் கூடுதலாக 200 இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கும் குலா நன்றித் தெரிவித்தார்.
அவை, இணையப் பாதுகாப்பு, AI தொழில்நுட்பம், டிஜிட்டல் தடயவியல், டிஜிட்டல் மற்றும் நல்லாட்சி தொடர்பான பயிற்சிகளாகும்.
மலேசியா – இந்தியா இடையில் நிலவும் வலுவான உறவின் அடையாளத்தை இது பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.
இது தவிர, பீஹாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் குறித்தும் பேசப்பட்டது.
பல முக்கியத் துறைகளில் உபகாரச்சம்பளத்துடன் மேற்படிப்பை வழங்கினாலும், தற்போது அப்பல்கலைக்கழகத்தில் மலேசியர்கள் யாரும் சேரவில்லை துரதிர்ஷ்டவசமானது.
எனவே அப்பல்கலைக்கழகத்தைப் பற்றி மேலும் அறியவும், வழங்கப்படும் பல்வேறு படிப்புகளைக் கருத்தில் கொள்ளவும் மலேசியர்களை குலசேகரன் கேட்டுக் கொண்டார்.