
கோலாலம்பூர், ஏப் 27 – SRC இன்டர்நேஷனல் வழக்கில் சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செய்திருந்த மேல்முறையீட்டை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் மீட்டுக் கொண்டார்.
அந்த மேல் முறையீட்டை நஜீப்பின் சட்டக் குழுவான மெஸ்ஸர்ஸ் ஷாஃபி & கோ, (Messrs Shafee & Co) ஏப்ரல் 3 ஆம்தேதியன்று மீட்டுக்கொள்ளவதற்காக மனுவை தாக்கல் செய்தது.
இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி இன்றியும், செலவுகள் குறித்து எந்த உத்தரவும் இன்றியும் இந்த வழக்கு மீட்டுக்கொள்ளப்பட்டது .
இதன்வழி எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் வீட்டுக் காவலில் இருக்கக் கோரி நஜீப் அதே மேல்முறையீட்டை மீண்டும் தாக்கல் செய்ய முடியாது .எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு கால குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி கோரி நஜிப் தாக்கல் செய்த மனுவை டிசம்பர் 22 ஆம் தேதி நீதிபதி ஆலிஸ் லோக் தள்ளுபடி செய்தார்.
முன்மொழியப்பட்ட முழுமையான மன்னிப்பு மற்றும் சிறைத் தண்டனையை 50 விழுக்காடு குறைப்பது குறித்து, கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் தனது ஆலோசனைகளை வழங்கியிருந்தன, ஆனால் பேரரசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுக் காவல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று லோக் கூறினார்.
சிறைத் தண்டனைக் குறைப்பு மற்றும் அபராதம் தொடர்பில் பேரரசர் ஒரு முடிவை மட்டுமே எடுத்தார் என்றும் அவர் கூறினார்.



