
கோலாலம்பூர், டிசம்பர் 8 – உங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டியை நீங்கள் எப்போது கடைசியாகச் சுத்தம் செய்தீர்கள்?
ஞாபகம் வருமளவுக்கு மிக அண்மையில் அது நடக்கவில்லை என்றால், உண்மையில் நீங்கள் கவலைப்பட வேண்டும்.
ஆம், அசுத்தமான குளிர்சாதனப்பெட்டிகள் நுண்ணுயிரியல் மற்றும் இரசாயன அபாயங்களைக் கொண்டிருப்பதால், அவை ஆரோக்கியத்துக்குப் பெரும் கேடு என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உணவுகள் மூலம் பரவும் நோய்கள் முதல் தீங்கு விளைவிக்கும் இரசாயனம் வரை அப்பட்டியல் நீளுவதாக, UKM-மைச் சேர்ந்த பொது சுகாதார நிபுணர் Dr Mohd Hasni Jaafar (மொஹமட் ஹாஸ்னி ஜாஃபார்) கூறுகிறார்.
குறிப்பாக listeriosis, salmonellosis, E. coli உள்ளிட்ட கிருமித் தொற்றுகள் போன்ற உயிரியல் ஆபத்துகள் தான் கவலையை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
Salmonella கிருமித் தொற்று, சுத்தம் செய்யப்படாத பச்சை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் தொடர்புடையது; அதே சமயம் E. coli கிருமிப் பரவலானது சமைக்கப்பட்ட உணவுகள் சமைக்கப்படாத உணவுகளுடன் சேருவதால் ஏற்படுவதாகும்.
இதனால் உண்டாகும் உடல் உபாதைகள் நச்சுணவுப் பாதிப்பு தொடங்கி, வாந்தி வயிற்றுப்போக்கிலிருந்து பூசணம் பிடித்த உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை வரை இட்டுச் செல்கின்றன.
இது தவிர்த்து, உணவுகளைப் பொட்டலமிடப் பயன்படுத்தப்படும் பொருட்கள், குறிப்பாக காய்கறிகள், மீன் அல்லது இறைச்சியை மடிக்கப் பயன்படும் செய்தித்தாள்கள், பயனீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
அதற்குக் காரணம், செய்தித்தாள்களில் காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் இருக்கக்கூடும்.
சிறிய அளவு தானே என்று உதாசீனம் செய்தால், நீண்ட கால தாக்கம் உங்களை நாள்பட்ட தொற்று அல்லாத நோய்களுக்கு இட்டுச் சென்று விடும்.
எனவே, உணவு மாசுபாட்டைத் தடுக்க, குளிர்சாதனப்பெட்டியை சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் அவசியமானது.
சரியான வெப்பநிலை கட்டுப்பாடு கொண்ட புதிய குளிர்சாதனப் பெட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியத் தேவையிருக்காது.
ஆனால், எப்போது கறைகள் தென்படுகிறதோ, வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் உணரப்படுகிறதோ, அல்லது பூச்சித் தாக்குதல்கள் போன்ற அறிகுறிகள் தெரிகின்றனவோ, உங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டி உங்களின் உடனடி கவனம் தேவைப்படுகிறது என அர்த்தமாகும் என்கிறார் Dr ஹஸ்னி.