
பாலிக் பூலாவ், மார்ச்-26- பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை நிபோங்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2 ஆடம்பர கைக்கடிகாரங்கள், ரொக்கப் பணம் மற்றும் 69,500 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றை, 2 துப்புரவுப் பணியாளர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.
மார்ச் 10-ஆம் தேதி அவ்வீட்டில் ஒரு படுக்கையறையை சுத்தம் செய்யும் போது 31 மற்றும் 34 வயதுடைய சந்தேக நபர்கள் அப்பொருட்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வீட்டு உரிமையாளரான 44 வயது வர்த்தகரிடமிருந்து போலீஸ் புகார் கிடைத்திருப்பதை, தென்மேற்கு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் சசாலீ அடாம் உறுதிப்படுத்தினார்.
அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தனது ஒமேகா கடிகாரம், பணம் மற்றும் மனைவியின் வளையல் காணாமல் போனதாக, அவ்வாடவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
வீட்டை சுத்தம் செய்ய வந்த 2 பெண்களில் ஒருவர் தான் அவற்றை எடுத்துச் சென்றிருக்க வேண்டுமென்றும் புகார்தாரர் சந்தேகம் தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீஸ், மார்ச் 17-ஆம் தேதி ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு வீட்டில் 2 இந்தோனேசியப் பெண்களைக் கைதுச் செய்தனர்.
இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஒரு பை, நகைகள் மற்றும் 2 iPhone-கள் உட்பட 3 கைப்பேசிகளும் அடங்கும்.
முதல் சந்தேக நபர், 2 ஆடம்பர கடிகாரங்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார்; அவற்றை தனது கூட்டாளியிடம் ஒப்படைத்து, facebook-கில் ஒருவருக்கு 10,000 ரிங்கிட்டுக்கும் இன்னொருவருக்கு 5,000 ரிங்கிட்டுக்கும் விற்றுள்ளார்.
புகார்தாரர் facebook மூலம் அத்துப்புரவுச் சேவையை நாடியுள்ளார்; ஆனால் போலீஸ் சோதனையில் அந்த facebook கணக்கு சிக்கவில்லை.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் 2 சந்தேக நபர்களும் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இணையத்தில் குறிப்பாக பண்டிகைக் காலத்தில் விளம்பரப்படுத்தப்படும் பதிவுச் செய்யப்படாத துப்புரவு சேவைகளை பணியமர்த்தும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சசாலீ அறிவுறுத்தினார்.