
ஈப்போ, மார்ச்-27-தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளைத் தற்காலிகமாக மூட நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதோடு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால், குறுக்கோட்டம் , முகாம் அமைத்தல், அணிவகுப்பு பயிற்சிகள் மற்றும் பிற வெளிப்புறச் செயல்பாடுகள் உட்பட, பள்ளியின் வெளிப்புற நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ ( Wong Kah Woh ) தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சினால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக இது இருப்பதால் , தற்போதைய கடும் வெப்பம் மோசமடைந்தால் இது செயல்படுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் தினசரி வெப்பநிலை அளவுகளைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையைக் கையாள்வதில் மாநிலக் கல்வித் துறைகளுக்கும் பள்ளிகளுக்கும் போதுமான அனுபவம் உள்ளது என்று இன்று கோப்பேங் தமிழ்ப் பள்ளிக்கு பணி நிமித்தமாக வருகை தந்த பின்னர் Wong Kah Woh இத்தகவலை வெளியிட்டார்.



