
கோலாலம்பூர், ஜன 21 – புக்கிட் பிந்தாங்கில் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்தது.
ஜாலான் அலோர், ஜாலான் சங்காட் மற்றும் ஜாலான் பெடாரா ( Bedera ) ஆகிய இடங்களில் இரவு மணி 10.30க்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது 19 வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷாபான் ( Zakaria Shaaban ) தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக திரட்டப்பட்ட ஒருங்கிணைந்த உளவுத்துறையின் தகவல்கள் அடிப்படையில், அந்த கும்பலின் செயல்பாட்டு மையங்களாக அடையாளம் காணப்பட்ட வளாகங்களில் 25 குடிநுழைவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 59 கையடக்க கணிகள் உட்பட பல்வேறு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கும்பல் வெளிநாட்டினரை அதன் முதன்மை வாடிக்கையாளர்களாக குறிவைத்து, அதிக வருமானம் தரும் வாக்குறுதிகளுடன் 50 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரையிலான சிறிய அளவிலான முதலீடுகளையும் வழங்கியதாக ஜக்கரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.



