
சென்னை, ஏப்ரல்-10-அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’, ஏற்கனவே தணிக்கைப் பிரச்சனையில் வெளிவராமல் உள்ள நிலையில், திடீரென அப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
நேற்று மாலை, முதலில் 5 நிமிடக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கசிந்தன; பின்னர் முழுப் படமும் HD தரத்தில் கள்ள இணையத் தளங்களில் வெளியானது.
இதனால் படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன.
ஜனவரியில் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்க வேண்டிய ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் பெறாமல் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே கோடிக் கணக்கில் நட்டத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது இணையத்திலும் கசிந்திருப்பது இழப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதனிடையே கசிந்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை யாரும் பகிர வேண்டாம் என, அதன் இயக்குநர் H.வினோத் கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஒவ்வொரு காட்சியும் பலரின் கனவுகளை சுமந்து வருவதால், அனைத்து தரப்பினரும் படக்குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.
விஜய் இரசிகர்களும், இதுபோன்ற கள்ளப் பதிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென கோரி வருகின்றனர்.



