புத்ரா ஜெயா, ஜன 3 – மோசமான வறுமையை துடைத்தொழிப்பது மற்றும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது உட்பட மக்களுக்கான அனைத்து திட்டங்களும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார். இப்பிரச்னைகளுக்கு தாமதமின்றி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கலந்துரையாடல்களில் அவை அனைத்தையும் நாம் மறுபரிசீலிக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். வெள்ளம் உயிர்களைக் கொன்று, சொத்துக்களை அழிக்கிறது என்றால், வெள்ள தடுப்புத் திட்டத்தை முடிக்க ஆறு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றை அனைத்து தலைமைச் செயலாளர்களும் கவனிக்க முடியும் என அன்வார் கூறினார்.
உதாரணத்திற்கு கிளந்தானில் Rantau Panjang வெள்ளத் தடுப்பு த் திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது, ஆனால் 2ஆம் கட்டத் திட்டம் 2026ஆம் ஆண்டிலும், 3ஆம் கட்டத் திட்டம் 2029ஆம் ஆண்டிலும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருள் வெள்ள தடுப்பு திட்டத்தை முடிக்க Rantau Panjang மக்கள் 15ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதாகும் என பிரதமர்துறையில் நடைபெற்ற மாதந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ( Shamsul Azri Abu Bakar ) ஆகியோரும் கலந்து கொண்டனர்.