
குவந்தான் , ஜூலை 18 – பஹாங் தேசிய பதிவுத் துறையில் (NRD) ஒரு பிள்ளைக்கான அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது பொய்யான தகவல்களை வழங்கிய குற்றத்திற்காக , வேலையில்லாத நபருக்கு குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 6,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 9.49 மணிக்கு குவந்தான் தேசிய பதிவுத் துறை முகப்பிடத்தில் தனது மகளின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி 12 வயதுடைய பிள்ளைக்கு அடையாள கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, பொய்யான தகவல்களை வழங்கியதாக 65 வயதான அப்டா சைட் (Abdah Said ) மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா துவான் கமருஷாமான் ( Majistret Tengku Eliana Tuan Kamaruzaman) முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான அப்டா சைட், ஒப்புக்கொண்டார். அவருக்கு 6,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதோடு அதனை செலுத்தத் தவறினால் 10 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து Balok க்கைச் சேர்ந்த அந்த ஆடவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினார்.