
கோலாலம்பூர், மார்ச் 19- மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று தமது நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ .விக்னேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்நாட்டில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இதனை ஒரு போதும் கைவிடாமல் ஒன்றாக கைகள் கோர்த்து, நாம் அனைவரும் “மலேசியர்கள்” என்ற அடிப்படையில் நோன்பு பெருநாள் கொண்டாடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டுடார்.
நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள போதிலும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை சீர்குலையவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த காலங்களில் தோட்டப்புறங்களில் பல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
அந்த நிலை தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது. பல இன மக்களும் பல சமயத்தினரும் ஒருமித்துவாழும் இந்த மலேசியத் திருநாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான நோன்பு பெருநாள் இன மற்றும் சமய நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்த இனிமையான தருணத்தில் ம.இ.காவின் சார்பிலும் தமது குடும்பத்தின் சார்பிலும் நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.



