
மலாக்கா, ஏப் 14 -இணையவழி வேலைவாய்ப்பு மோசடி கும்பலை முறியடித்த போலீசார் , இதன் முதுகெலும்பாக செயல்லபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு சீனப் பிரஜைகளை கைது செய்தனர்.
நேற்று காலை மணி 10.30 அளவில் Taman Puncak Bertam மிலுள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைச் தொடர்ந்து அக்கும்பலின் நடவடிக்கை அம்பலமானது.
அந்த வளாகம், மோசடியான ஆன்லைன் பகுதிநேர வேலை வாய்ப்புகளைக் கையாளும் அழைப்பு மையமாகப் பயன்படுத்தப்பட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கிறிஸ்தோபர் பதிட் ( Christopher patit ) தெரிவித்தார்.
28 மற்றும் 38 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் ‘வாடிக்கையாளர் சேவை பணிகளைச் செய்து வந்ததும், பாதிக்கப்பட்டவரை ஏமாற்றும் நடவடிக்கைகளின் முக்கிய பின்னணியாக அவர்கள் செயல்பட்டதும் கண்டறியப்பட்டதாக தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அவர்கள் டெலிகிராம் செயலி வழியாக இல்லாத பகுதிநேர வேலைகளை வழங்குவதாகக் கூறி, பின்னர் அந்த வேலையைப் பெற்றுத் தருவதற்காக பாதிக்கப்பட்டவரை ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துமாறு வற்புறுத்தியதாக நம்பப்படுகிறது என இன்று வெளியிட்ட அறிக்கையில் Christopher விவரித்தார்.
இந்த கும்பல் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து செயல்பட்டு வந்ததோடு , தங்களது நடவடிக்கைக்கு அமெரிக்காவில் வசித்துவரும் சீனர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளது.
இக்கும்பல் பயன்படுத்திவந்த 30,000 ரிங்கிட் மதிப்புள்ள கையடக்க கணினிகள், கை தொலைபேசிகள் உட்பட பல்வேறு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கிறிஸ்தோபர் கூறினார்.



