Latestமலேசியா

சித்திரை புத்தாண்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துவோம் – கோபிந்த் சிங் வாழ்த்து

கோலாலம்பூர், ஏப் 14 – மலேசிய சகோதரர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இந்த புத்தாண்டு நமது கடந்த கால சாதனைகளை திரும்பிப் பார்ப்பதற்கும், பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துவதற்கும் முக்கிய தருணமாக அமைவதாக இலக்கவியல் அமைச்சரும் ஜ.செ.கவின் தேசிய தலைவருமான கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வலிமையையும் தாண்டி, சமூக நல்லிணக்கமே நமது மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது.

தற்போதைய காலகட்டத்தில், நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக, வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் ஒன்றுபட்டிருப்பது இன்றியமையாததாகும்.

இலக்கவியல் அமைச்சில், எந்த ஒரு பாகுபாடுமின்றி, ஒவ்வொரு மலேசியரும் வருங்காலத்தை நோக்கிய தொழில்நுட்பப் புத்தாக்கதில் வலுப்பெறுவதை உறுதி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்.

இலக்கவியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், நமது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தி, நாட்டை மேம்பாடடையச் செய்வதே எங்கள் நோக்கமாகும் என இன்று வெளியிட்ட சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், மத்திய கிழக்கில் தொடரும் மோதலானது உலகளாவிய நிலையில் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியிருப்பதோடு அதன் தாக்கம் நமது நாட்டிலும் உணரப்படுகிறது.

மடானி அரசாங்கம் இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக அயராது உழைத்து வருவதால் இதற்கு ஒவ்வொரு மலேசியரின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வேளையில் உலக அமைதிக்காகவும், நமது அன்புக்குரிய மலேசியாவின் நல்லிணக்கம் நிலைத்திருக்கவும் பிரார்த்திப்போம்.

இந்தப் புத்தாண்டு நமது அன்புக்குரியவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.

இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கும் இனிய வைசாகி மற்றும் விஷு நல்வாழ்த்துக்களையும் கோபிந்த் சிங் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!