
செப்பாங், ஜூலை-14 – KLIA 2 விமான முனையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் மீது எழுந்துள்ள முறைகேடு புகார் தொடர்பாக, மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS தீவிர உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
‘Threads’ சமூக ஊடகத் தளத்தில் வைரலான ஒரு பதிவின் அடிப்படையில், அந்த அதிகாரி தனது தனிப்பட்ட வங்கி கணக்கின் QR குறியீடு மூலம் 100 ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணைக்காக உயர் அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டு அவரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைப் பதிவிட்ட நபரைத் தொடர்புகொண்டு மேலதிகத் தகவல்களைத் திரட்ட AKPS முயற்சித்தும், திங்கட்கிழமை மாலை வரை அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறும் எந்தவொரு பணியாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என AKPS எச்சரித்துள்ளது.
முறைகேடு நிரூபிக்கப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்பது உறுதி.
மேலும், இது தொடர்பாகத் துல்லியமான தகவல்கள் தெரிந்த பொது மக்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



