
புத்ராஜெயா, மார்ச்-4 – ஆஸ்ட்ரோவுக்குச் சொந்தமான வானொலி நிலையமொன்றின் ஊழியர்கள் மற்ற மத விழாக்களை கேலி செய்வது போலான வீடியோ, சமூக ஊடக தளங்களில் பதிவேற்றப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்புத் துறை அமைச்சுக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து முழுமையான விளக்கத்தை வழங்குவதற்காக ஆஸ்ட்ரோ மற்றும் சம்பந்தப்பட்ட வானொலி நிலைய நிர்வாகத்தை அழைத்து விரிவான விசாரணை நடத்துமாறு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC-யை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார் அவர்.
இந்துக்கள், காவடியாட்டத்தின் போது உச்சரிக்கும் ‘வேல் வேல்’ என்ற சுலோகத்தை இழிவுப் படுத்தும் வகையில் ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் நடந்துகொண்ட வீடியோ முன்னதாக வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ஏரா வானொலி நிர்வாகம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும், இவ்விவகாரத்தை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப் போவதாகவும் இந்து அமைப்புகள் தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏரா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணனும் வலியுறுத்தியுள்ளார்.