
ஷா ஆலாம், ஆகஸ்ட்-5 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் சாலை வழிப்பறிக் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்து, 30 வயது ஆடவன் பொது மக்களிடம் பிடிபட்டான்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது அவ்வாடன், காருக்குள் அமரவிருந்த ஆடவரின் கழுத்திலிருந்த சங்கிலியை இழுக்க முயன்றான்.
எனினும் பாதிக்கப்பட்ட நபர் மல்லுக்கட்டி தனது சங்கிலியை திருப்பி இழுத்ததால், மோட்டார் சைக்கிளோட்டி கீழே விழுந்தான்.
அப்போது அங்கிருந்த பொது மக்கள் அந்த வழிப்பறி கொள்ளையனை மடக்கிப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
அவனது மோட்டார் சைக்கிள், சாவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸ், போலி வாகனப் பதிவு எண் பட்டையை அவன் பயன்படுத்தியதையும் உறுதிச் செய்தது.
ஏற்கனவே இது போன்ற வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதை அவன் ஒப்புக் கொண்டான்.
மேல் விசாரணைக்காக ஆகஸ்ட் 7 வரை அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஷா ஆலாம் போலீஸ் கூறியது.