
ஷா ஆலாம், ஜூலை-23- ஷா ஆலாம், செக்ஷன் 15-ல் Otomobil வர்த்தக மையத்தை நேற்று மாலை குடிநுழைவுத் துறையும் ஷா ஆலாம் மாநகர் மன்றமும் முற்றுகையிட்டதில், ‘வியாபாரிகளான’ வெளிநாட்டினர் தலைத்தெறிக்க ஓடினர். இதனால் அப்பகுதியே பரபரப்பானது.
மளிகைக் கடை, முடித்திருத்தும் கடை, கார் கழுவும் கடை போன்றவற்றை நடத்தி வருவதோடு, கடைத் தெருக்களின் பின்னால் உயிருள்ள கோழிகள் மற்றும் வாத்துகளையும் இந்த வெளிநாட்டினர் விற்று வருகின்றனர்.
முறையான உரிமம் இன்றி வியாபாரம் செய்து வரும் கடைகளைக் குறி வைத்து அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அதிகாரிகள் வருவதை கண்டதுமே, சில வியாபாரிகள் கடைகளை அவசர அவசரமாக மூடி விட்டு ஓட்டம் பிடிக்க முயன்றனர்.
மொத்தமாக 89 கடைகளை பரிசோதனையிட்ட அதிகாரிகள், அவற்றில் 5 கடைகளை மூட உத்தரவிட்டதோடு, ஒரு கடைக்கு சீல் வைத்தனர்.
உரிமம் இல்லாதது, வெளிநாட்டினர் நடத்தி வந்தது, முறையான பெர்மிட் இன்றி உயிருள்ள கால்நடைகளை விற்றது உள்ளிட்ட குற்றங்களுக்காக கடைகள் மூட உத்தரவிடப்பட்டன.
விசாரணையில், அவர்களில் பலர் ஐந்தாண்டுகளாகவே சட்டவிரோதமாக வியாபாரம் நடத்தி வருவதை ஒப்புக் கொண்டனர்.
14 நாட்களுக்குள் மாநகர் மன்றத்திற்கு வந்து உரிய விளக்கமளித்து, விதிமீறல்களை திருத்திக் கொள்ள வேண்டுமென அக்கடைகளின் உரிமையாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைதான வெளிநாட்டவர்கள் இந்தோனேசியா, நேப்பாளம், வங்காளதேசம், மியன்மார், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களின் ஆவண சரிபார்ப்புத் தொடருவதாக அதிகாரிகள் கூறினர்.