
கோலாலம்பூர், ஏப்-1- ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்காக தற்போது காத்திருக்கும் மலேசியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க, எந்தவொரு இராணுவ வசதிகள் அல்லது பாதுகாப்புப் படைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
அந்த கடற்பகுதிக்கு இதுவரை துருப்புக்களையோ அல்லது பாதுகாப்புக்காக இராணுவ வசதிகளையோ அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆனால் தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் உதவி வழங்க தனது தரப்பு தயாராக இருப்பதாக மலேசிய இராணுவப் படைகளின் தளபதி ஜெனரல் டத்தோ மாலிக் ரசாக் சுலைமான் ( Malek Razak Sulaiman ) தெரிவித்தார்.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதட்டம் அதிகரித்து வந்தபோதிலும், ஈரான் அளித்த உறுதிமொழிகளைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் குறைந்தது ஏழு மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகச் செல்லும் என்று ஊடகங்கள் முன்னதாகத் தகவல் வெளியிட்டிருந்தன.
பாரசீக வளைகுடாவில் கப்பல்கள் இருப்பது குறித்தும், அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல அவற்றின் நோக்கம் குறித்தும் ஈரானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவுக்கான ஈரானிய தூதர் வாலியோல்லா முகம்மதி நஸ்ரபாட் (Valiollah Mohammadi Nasrabad) கூறினார்.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல ஏழு மலேசிய எண்ணெய்க் கப்பல்கள் அனுமதிக்குக் காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
அந்தக் கப்பல்கள் தடுத்து வைக்கப்படவில்லை என்றும், மாறாக, தங்கள் பயணத்தைத் தொடர ஒரு பாதுகாப்பான நேரத்திற்காகவும் அதிகாரப்பூர்வ சமிக்ஞைக்காகவும் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.



