
புத்ரா ஜெயா, மார்ச் 21 – நோன்பு மாதத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட சூழலில் பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் ஊடகவியலாளர்களை மகிழ்விக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நோன்பு துறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த இப்தார் விருந்து, ஊடகவியலாளர்களுடன் நோன்பு துறப்பதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமின்றி , மக்கள் எப்போதும் உண்மையான மற்றும் சீரான செய்திகளைப் பெறுவதை உறுதி செய்வதில் அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாகும் என அந்தோனி லோக் தமதுரையில் தெரிவித்தார்.
மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக, போக்குவரத்து அமைச்சு, அது தொடர்புடைய அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை பரப்புவதில் இந்த ஒருங்கிணைப்பு தொடர்ந்து விரிவடையும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தனது ஊடக நண்பர்களுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக, புத்ராஜெயா மீடியா கிளப் சமூகத்திற்கு தகவல்களை வழங்குவதை வலுப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்கிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சிறப்பு நன்கொடையையும் அந்தோனி லோக் வழங்கினார்.
இந்த நன்கொடையானது, மக்களுக்குத் தகவல் மற்றும் பயனுள்ள செய்திகளைப் பரப்புவதில் கிளப் தொடர்ந்து செயலில் ஈடுபட உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.