
கோலாலம்பூர், அக்டோபர் 10 –
ஜூன் மாதம் முதல் தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 10 குற்றச்சாட்டுகளை இன்று தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் மறுத்தார். நீதிபதி நோர்ஹமிசா ஷைபுதீன் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், 48 வயதான அந்த தனித்து வாழும் தந்தை குற்றத்தை மறுத்தார். இவ்வாண்டு ஜூன் 21 முதல் செப்டம்பர் 25 ஆம்தேதிவரை ஹிலிர் பேராக்கின் லங்காப்பில் உள்ள கம்போங் அலோர் பகோங்கில் உள்ள ஒரு வீட்டில் அந்த சிறுமியை 10 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை , 10 பிரம்படிகள் வரை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 376 (3) ஆவது பிரிவின் கீழ் அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குமிடையிலான உறவை கருத்தில் கொண்டு அரசாங்க துணை வழக்கறிஞர் டி.பி.பி அனிசா பிசோல் ஜாமீன் வழங்கவில்லை, ஆனால் நீதிமன்றம் தனது விருப்பப்படி செயல்பட முடிவு செய்தால் ஒரு குற்றச்சாட்டிற்கு ஒருவர் உத்தரவாதத்துடன் 5,000 ரிங்கிட் ஜாமின் வழங்க பரிந்துரைத்தார்.
ஒரு நபர் உத்தரவாதம் மற்றும் அரசு தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளுடன் 50,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்ததோடு இந்த வழக்கு டிசம்பர் 4ஆம் தேதி மீண்டும் மறு வாசிப்புக்காக செவிமடுக்கப்படும்.