
தம்பின், மார்ச்-31-நெகிரி செம்பிலான், தம்பினில் 112 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஸ்ரீ சுந்தரேச விநாயகர் ஆலயம்.
10,000-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார இந்துக்களுக்கு மிக முக்கியமான ஆலயங்களில் ஒன்றும் கூட.
இன்று நூற்றாண்டு பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் இந்த ஆலயம், வரும் ஜூன் 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் காணவுள்ளது.
சிறிய வழிபாட்டுத் தலமாக தொடங்கி, கோபுரங்களுடன் கூடிய பெரியக் கோவிலாக வளர்ச்சி கண்ட பிறகு, இவ்வாலயத்தில் நடைபெறும் மூன்றாவது குடமுழுக்கு இதுவாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த வணிகரும் பூசாரியுமான கருப்பன் செட்டியார் என்பவர் சிறிய கோவிலாக இதை நிறுவினார்.
அந்த ஆரம்ப கால வரலாற்றை வணக்கம் மலேசியாவிடம் விளக்குகிறார், அதன் நடப்புத் தலைவர் கோவிந்தசாமி ராஜூ.
ஆலயம் இன்று வரை தொடருவதற்கு, இந்த கருப்பன் செட்டியாரின் செய்த ஒரு முக்கியமானச் செயல் காலத்திற்கும் நினைவுக்கூறத் தக்கது.
எதிர்காலத்தை அன்றே சரியாக கணித்தாரோ என்னவோ, மீண்டும் இந்தியாவுக்கே நிரந்தரமாக திரும்பும் முன்னர் ஆலய நிலத்தை அவர் பதிவுச் செய்து விட்டுச் சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய கொட்டகை அளவுக்கு இருந்த கோவிலை, செட்டியார் சற்று பெரிதாக்கி கொடுத்து விட்டுச் செல்ல, காலப்போக்கில் படிப்படியாக வளர்ந்து இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
வழிபாட்டு நடவடிக்கைகள் போக, சிறிய கல்யாணம் மண்டபம், அலுவலகம், திருமண பதிவதிகாரிக்கான அறை என வசதிகளை இந்த ஆலயம் கொண்டுள்ளது.
வெறும் வழிபாடு என்றில்லாமல், பரதநாட்டிய வகுப்பு, இலவச தேவார வகுப்பு என பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கும் இந்த ஆலயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் புனரமைப்புக் காரணமாக, இட வசதி பிரச்சனையால், திருமணங்கள், டியூஷன் வகுப்பு, சிலம்ப வகுப்பு போன்றவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இங்கு சிலம்பம் பயின்றவர்கள் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று பெருமை சேர்த்திருப்பதாகவும் கோவிந்தசாமி கூறினார்.
புனரமைப்புகளில் அடுத்து, ஆலயத்திற்கு வரும் பாதையை அமைப்பதே முக்கியத் தேவையாக உள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், ரெப்பா வட்டாரத்தில் இந்த ஆலயத்தின் பராமரிப்பில் இந்து மயானம் இயங்கி வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் வீரப்பனின் முயற்சியில் புதிய மின்சுடலை திட்டம் சாத்தியமாகியுள்ளது.
ஆலயத்திலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில், அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள நிலத்தில் இந்த மின்சுடலை நிர்மாணிக்கப்படுமென அவர் சொன்னார்.
இந்நிலையில், 2002, 2014, முடிந்து இப்போது 2026 என மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு ஆலய நிர்வாகம் தயாராகி வருகிறது.
முன் கூட்டியே கால பூஜைகளோடு, விநாயகருக்கு உரிய அனைத்து பூஜைகளும் அன்றைய தினம் களைக் கட்டும்.
கடந்த முறை சுமார் 3,000 பக்தர்கள் கும்பாபிஷேகத்திற்கு ஒன்றுகூடிய நிலையில், இம்முறை அதை விட அதிகமான பக்தர்களை ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இப்படி, சமயம்- சமூகம் என பல்வேறு நடவடிக்கைகளில் முன்னிற்கும் இந்த சுந்தர விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பணிகளுக்கு பொது மக்களின் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறைந்தது 150,000 ரிங்கிட்டாவது கூடுதலாக தேவைப்படுவதால், நல்லுள்ளம் கொண்டவர்களின் நிதியை வரவேற்பதாக கோவிந்தராஜு சொன்னார்.
நன்கொடை அளிக்க விரும்புவோர், திரையில் காணும் வங்கிக் கணக்கில் அவ்வாறு செய்யலாம்.



