கோலாலம்பூர், டிசம்பர் 18 – 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 13ஆவது மலேசியத் திட்டத்தில், இந்திய சமுதாயத்தின் நலனுக்காக ம.இ.கா திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக, ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில், இந்திய சமுதாயத்தின் நலன்கள் தொடர்பில் 8 அம்ச திட்டங்கள் 40 பரிந்துரைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கல்வி, வேலை வாய்ப்பு, மகளிர் மேம்பாடு, சமயம், பொருளாதார மேம்பாடு, இளைஞர் மேம்பாடு, சமூக சிக்கல்கள், உள்திட்டங்கள் போன்ற முக்கிய அம்சங்களை, ம.இ.கா பொருளாதார அமைச்சர் ராபிஸி ரம்லியிடம் முன்வைக்கும் என அவர் விளக்கமளித்தார்.
இதனிடையே முன்பு அமலில் இருந்த மலேசிய இந்தியன் புளுபிரிண் இந்தியர்களுக்கான பெருந்திட்ட வரவையில் இடம்பெற்றிருந்த சில அம்சங்களும் தொடரப்படுவதற்கு வலியுறுத்தப்படும் என்றும் சரவணன் தெரிவித்தார்.
ம.இ.கா ஒவ்வொரு மலேசிய திட்டத்திலும் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதுபோல் இம்முறை 13ஆவது திட்டத்திலும், இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டிற்கு எட்டு அம்சங்களை முன்வைக்கவுள்ளதாக, இன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.