புத்ராஜெயா, டிசம்பர்-13, ஜந்தாண்டு கால மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்களை வரையும் முக்கியப் பொறுப்பு, முதன் முறையாக மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
13-வது மலேசியத் திட்டம் 2026-ல் தொடங்குவதால், அதற்கான முன்வரைவைத் தயார் செய்வதில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
அவ்வகையில் இந்தியச் சமூகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக, மித்ரா ஏற்பாட்டில் புத்ராஜெயாவில் இன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.
ஏற்கனவே 9 மாநிலங்களில் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு விட்ட நிலையில், இறுதிக் கட்டமாக இன்றைய நிகழ்வு அமைந்தது.
மித்ரா தலைவர் பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற அக்கலந்தாய்வில், அரசு சார்பற்ற அமைப்புகள், வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 அம்சங்களை முன்னிறுத்தி இந்தியர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாக பிரபாகரன் சொன்னார்.
நகர்ப்புற ஏழ்மையைத் துடைத் தொழிப்பதில் இந்தியர்களையும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இணைத்து, அவர்களும் சொந்த வீடுகளைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்வது முதன்மைக் குறிக்கோளாகும்.
வருங்காலத் தலைமுறையான இந்திய இளைஞர்களை நிபுணத்துவம் பெற்றவர்களாகவும், திறன் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உருவாக்குதல், இந்தியத் தொழில்முனைவோரை மேம்படுத்துதல், தமிழ்ப்பள்ளிகளின் வசதிக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாலர் வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல், சமூக நிலைத்தன்மையை உருவாக்குதல் ஆகியவை இதர 4 முக்கிய அம்சங்களாகும்.
பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரை அறிக்கையாக வரும் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் பொருளாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலுக்குச் செல்லும் போது, மித்ராவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 13-வது மலேசியத் திட்டத்தில் அவை இடம் பெறுமென பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இன்றையக் கலந்தாய்வில் மித்ரா தலைமை இயக்குநர் ஜி. பிரபாகரன், சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr. ஜி.குணராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.