Latestமலேசியா

13வது மலேசியத் திட்டம் மடானி கொள்கைகளுக்கு ஏற்ப இந்தியச் சமூகத்தை உயர்த்தும் – ரமணன் நம்பிக்கை

13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பல முக்கிய வியூகத் திட்டங்களால் இந்தியச் சமூகம் நேரடியாகப் பயனடையும்.

இது மடானி பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அமைவதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணைமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

மலேசிய இந்தியர்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோரின் சமூகப் பொருளாதார நிலையை பன்முக அணுகுமுறை மூலம் உயர்த்துவதை, இந்த ஐந்தாண்டு காலத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் உயர் வருமான வேலைகளுக்கான பாதையாக STEM மற்றும் TVET துறைகளில் தரமான கல்வி மற்றும் திறமை மேம்பாட்டிற்கான அணுகலை விரிவுபடுத்துவதும் அடங்கும் என ரமணன் சொன்னார்.

அதே சமயம், சேதமடைந்த வீடுகளை பழுதுபார்த்தல், வசதிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புக்கள் மக்களுக்குக் குறிப்பாக இந்தியர்களுக்கு நன்மைப் பயக்கும் என்றார் அவர்.

இவ்வேளையில், இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமான SPUMI, இந்தியச் சமூகத்துக்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டமான PPSMI போன்றவை தொடரும்.

கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக நல்வாழ்வை உறுதிச் செய்ய இது அவசியமென அவர் சொன்னார்.

புதிதாக, இந்திய கிராமங்களுக்கான மேம்பாட்டுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும்; அதே சமயம் உயர் மதிப்புள்ளத் துறைகளில் இந்தியர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, franchise எனும் உரிமை வணிகத் துறையில் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த 13-ஆவது மலேசியத் திட்டம் இந்தியர்களைப் புறக்கணிக்காமல் மிகவும் கவனமாக வரையப்பட்டுள்ளது; இது நமது மக்களை நிலையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் மடானி கொள்கை சார்ந்த எதிர்காலத்தை நோக்கி மேம்படுத்தவும் அதிகாரம் அளிக்கவும் உதவும் என, ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!