
புத்ராஜெயா, ஜனவரி-27 – மடானி அரசாங்கம் ‘தர்ம மடானி’ திட்டத்தின் கீழ் இந்துக் கோவில்களுக்கு நிதியுதவி வழங்கத் தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக, 152 கோவில்களுக்கு மொத்தம் 3.1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு ஒப்படைக்கப்பட்டது.
புத்ராஜெயாவில் இன்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், ஆலயத் தலைவர்களிடம் அதற்கான அங்கீகார கடிதங்களை எடுத்து வழங்கினார்.
ஒவ்வோர் ஆலயமும் தலா 20,000 ரிங்கிட்டை பெற்றுக் கொண்டன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்தாண்டு அறிவித்த இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள 1,000 பதிவு பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 20 மில்லியன் ரிங்கிட் உதவியின் ஒரு பகுதியாகும்.
அரசாங்கம், வழிபாட்டுத் தலங்களை சமூக ஒற்றுமையின் தூண்களாகக் கருதி, இத்தகைய நிதியுதவிகள் மூலம் சமூக வலிமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக ரமணன் தமதுரையில் குறிப்பிட்டார்.
மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் மேற்பார்வையில், தற்போது மனிதவள அமைச்சின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மித்ராவை, பிரதமர் துறையிலிருந்து மனிதவள அமைச்சுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்ற கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரகைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட தகவலையும், இந்தியச் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அமலாக்கக் குழுவின் தலைவருமான ரமணன் உறுதிப்படுத்தினார்.



