
புத்ராஜெயா, ஆகஸ்ட்-6- இடைநிலைக் கல்வியை 16 வயதிலேயே முடிக்க வகை செய்யும் பரிந்துரையை அரசாங்கம் ஆழமாக ஆராய்ந்து வருகிறது.
உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Dr Zambry Abdul Kadir) அதனைத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் ஒருமுகப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
காலங்காலமாக 12 ஆண்டுகளை உள்ளடக்கிய மலேசிய பள்ளிக் கல்வி முறையைக் குறைக்க வேண்டி முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி முன்வைத்துள்ள அப்பரிந்துரை, உண்மையில் அரசாங்கத்தின் கவனத்தில் இருக்கும் கல்வி சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
5 வயதில் பாலர் பள்ளியைக் கட்டாயமாக்கும் திட்டம் அண்மையில் 13-ஆவது மலேசியத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
நாட்டில் நடப்பில் பாலர் பள்ளி 6 வயதிலும், ஆரம்பக் கல்வி 7 வயதிலிருந்து 12 வயது வரையிலும் இடைநிலைக் கல்வி 13 வயதிலிருந்து 17 அல்லது 18 வயது வரையிலும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.