
புத்ராஜெயா, மே-23-2025 SPM தேர்வை முடித்த மாணவர்களில் மொத்தம் 169, 803 பேருக்குப் பொது உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு UPUOnline அகப்பக்கம் வாயிலாகப் பெறப்பட்ட 235,000-க்கும் மேற்பட்ட தகுதியான விண்ணப்பங்களில், 72.11 விழுக்காடு மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 91 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும், எஞ்சிய மாணவர்கள் பாலிடெக்னிக், சமூகக் கல்லூரிகள் மற்றும் MARA உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க தகுதி மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில், மாற்றுத்திறனாளிகள், ஓராங் அஸ்லி மற்றும் B40 பிரிவினருக்கு சிறப்புப் பாதைகள் மூலமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முறை பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்கள், வரும் மே 31ஆம் தேதி மாலை 5 மணி வரை UPUOnline அகப்பக்கத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.



