
கோலாலாம்பூர், ஜனவரி-30 – மலேசிய இந்துக்கள் தைப்பூசத்திற்குத் தயாராகி வரும் இவ்வேளையில், பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கு இடையில் நிலவிய நல்லிணக்கத்தை நினைவுக் கூர்ந்துள்ளார், பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலின் முன்னாள் தலைவர் எஸ்.பி. நாராயணசாமி.
தற்போது 91 வயதை எட்டியுள்ள இவர், 1971-ஆம் ஆண்டு, அப்போதைய சிலாங்கூர் சுல்தான் சுல்தான் சலாஹுடின் அப்துல் அசிஸ் ஷா மற்றும் அவரின் துணைவியார் தெங்கு அம்புவான் ரஹிமா பத்து மலைக்கு வருகையளித்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவுகூருகிறார்.
அன்றைய தினம் ஒரு பாத்திக் தொழிற்சாலையைத் திறந்து வைப்பதே சுல்தானின் பயணத் திட்டமாக இருந்தது; என்றாலும், அவர் அதனை மாற்றி முதலில் பத்து மலைக்கு வந்து ஆச்சரியமூட்டினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்களும் பள்ளி மாணவர்களும் அவரை முகம் மலர வரவேற்றனர்….
அந்த வருகை, சுமார் 2 மணி நேரம் நீடித்தது; பல தரப்பினரின் ஒத்துழைப்புடன், சமூகத் தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்த விருந்தோம்பலுடன் இனிதே நிறைவடைந்தது.
சுல்தானின் சலாஹுடின் தன்னை முஸ்லீம் சமூகத்தின் தலைவராக மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள பிற மதத்தினருக்கும் பொறுப்பான ஆட்சியாளராகக் காட்டியது, தம் நினைவில் நீங்காமல் நிற்பதாக நாராயணசாமி கூறினார்.
இன்றோ, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நாட்டின் வேகமான வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு இணையாக இல்லை என நாரயணசாமி வருத்தம் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுக்கும் ‘முஹிபா’ நல்லிணக்கத் திட்டங்களை தாம் ஆதரிப்பதாகவும், ஆனால் உண்மையான ஒற்றுமை என்பது பள்ளி பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்றும் இவர் வலியுறுத்துகிறார்.
சிறுவயதிலிருந்தே மதங்களுக்கிடையேயான மரியாதை மற்றும் புரிதலை வளர்க்க வேண்டும். அதற்கு தைப்பூசம் போன்ற சமய விழாக்களின் மகத்துவத்தை அனைத்து சமூகத்தினரும் அறிந்து கொள்வது உதவும் என்கிறார் இவர்.



