
புத்ரா ஜெயா, ஜன 16 – 1MDB-யை தனது குழந்தையாக சித்தரிக்கவோ அல்லது நாட்டின் முக்கிய முதலீட்டு நிறுவனமான அதனை தாம் தொடங்கியதாக அரசு தரப்பு கூறிவருவது குறித்து டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். 1MDB முதலில் திரெங்கானு முதலீட்டு வாரியம் நிறுவனமாக இருந்தது. 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி அதனை கூட்டரசு அரசாங்கம் கையகப்படுத்தியது என்பதை தாம் ஏற்கனவே பல முறை கூறிவந்துள்ளதை முன்னாள் பிரதமரான நஜீப் சுட்டிக்காட்டினார்.
அந்த நிறுவனத்தை தொடங்கியது தனது திட்டமல்ல. நாட்டிற்கு முதலீட்டை தேடும் நிறுவனமாக தாம் அதனை மாற்றியதாகவும் எனவே 1MDB-யை எனது குழந்தை என தொடர்புபடுத்தும் அரசு தரப்பின் நடவடிக்கையை தாம் கடுமையாக ஆட்சேபிப்பதாக நஜீப் தெரிவித்தார். 1MDB தொடங்கப்பட்டதற்கு தாம் பொறுப்பு அல்ல என நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செக்குயிரா ( Collin Lawrence Sequerah ) முன்னிலையில் நடைபெற்றுவரும் 1MDB வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் Mohamad Mustaffa P Kunyalam எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது நஜீப் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் தொடரும்.