
இஸ்லாமாபாத், டிசம்பர் 21-ரன்வீர் சிங் – அக்ஷய் கண்ணா நடிப்பில் வெளியான போலிவூட் திரைப்படமான ‘துரந்தர்’, எல்லை தாண்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது…
ஆனால், திரையரங்க வசூலுக்காக மட்டுமல்ல…
மாறாக, இதுவரை இல்லாத அளவிலான இணையத் திருட்டு பதிவுகளுக்காகவும் இப்படம் பேச்சுப் பொருளாகியுள்ளது.
சர்சைக்குரிய காட்சிகள் மற்றும் கதைக் களத்தைக் கொண்டிருப்பதால் பாகிஸ்தானில் அதிகாரப்பூர்வமாக தடைச் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த இரு வாரங்களில் மட்டும் ‘துரந்தர்’ படம் 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட சட்டவிரோத பதிவிறக்கங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் திருட்டுத் தனமாக அதிகம் பதிவிறக்கப்பட்ட ஹிந்தி திரைப்படமாக இது மாறியுள்ளது.
திரையரங்க வெளியீடு இல்லாததால், அந்நாட்டு சினிமா இரசிகர்கள் VPN மற்றும் சட்டரோத இணையத் தளங்கள் மூலம் படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது.
இது, படத்திற்கு பெரும் வரவேற்பை காட்டினாலும், தயாரிப்பாளர்களுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்றாலும், இணையத் திருட்டு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், ‘துரந்தர்’ படத்தின் உலகளாவிய வசூல் பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சரியமே.
இப்படம் இந்தியாவில் மட்டும் 500 கோடி ரூபாயையும், வெளிநாடுகளில் 140 கோடி ரூபாயையும் கடந்து, அண்மைய காலங்களில் அமோக வசூலைக் குவித்த போலிவூட் திரைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.



