கோலாலம்பூர், அக்டோபர்-19 – 2025 வரவு செலவு அறிக்கையில் ‘வீட்டுக் காவல்’ பற்றி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொட்டுப் பேசியது குறித்து PKR நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் (Hassan Karim) அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ‘மேல்தட்டு’ தலைவர்களின் தண்டனைக் குறைப்புக்கான முன்முயற்சியா அதுவென ஹசான் கேள்வியெழுப்பினார்.
பட்ஜெட் என்பது நாட்டின் பொருளாதாரத்தையும் நிதித் துறையையும் பற்றியதாக இருக்க வேண்டும்.
சிறைத்தண்டனை தொடர்பான சட்டத்திருத்தங்கள் குறித்த அம்சங்களுக்கு பட்ஜெட்டில் என்ன வேலை?
அதுவும் திடீரென ஒரு வரியில் ‘வீட்டுக் காவல்’ குறித்த வாக்கியம் பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டியதன் அவசியம் என அந்த பாசீர் கூடாங் MP கேட்டார்.
‘வீட்டுக் காவல்’ தண்டனைக்குத் தகுதிப் பெற்ற குற்றங்கள் என்பதற்கான விளக்கம் இல்லை.
ஆக, ஊழல் குற்றவாளிகளும், நம்பிக்கை மோசடி குற்றவாளிகளும் ‘வீட்டுக் காவலுக்கு’ தகுதிப் பெறுவார்களா என ஹசான் கேட்டார்.
குறிப்பிட்ட குற்றங்களுக்கு ‘வீட்டுக் காவல்’ தண்டனை விதிக்க புதியச் சட்டம் இயற்ற உத்தேசிக்கப்பட்டிருப்பதாக, நேற்றைய பட்ஜெட் தாக்கலின் போது அன்வார் அறிவித்திருந்தார்.