
கோலாலம்பூர், மார்ச்-24- கிறிஸ்துவ மிஷினரி பள்ளிகள், காலனித்துவ ஆட்சியின் போது நாட்டின் கல்வி முறையில் பெரும் பங்காற்றியுள்ளன; ஆனால் இன்று பராமரிப்புகே கஷ்டப்படும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன.
குறிப்பாக, பட்டவொர்த் கான்வென்ட் (Convent) தேசியப் பள்ளியில் மின்சார வயரிங் கம்பி அமைப்பு படுமோசமான நிலையில் உள்ளதாக, மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் கூறினார்.
இதனால் நீட்டிக்கப்பட்ட கம்பி இணைப்பை அது நம்பியிருக்க வேண்டியுள்ளது; இது அங்குள்ள 389 மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், அந்த வயரிங் கம்பி அமைப்பைப் பழுதுபார்க்க அப்பளிக்கு உடனடி நிதியாக 900,000 ரிங்கிட் ஒதுக்கப்பட வேண்டுமென, லிங்கேஷ் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில் செயின்ட் மார்க் பட்டவொர்த் (St. Mark Butterworth) தேசியப் பள்ளியில் கட்டட அமைப்பு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது; இதனால் ஒரு புளோக் கட்டடம் மூடப்பட்டு, வகுப்பறைகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
பல்லினங்களைச் சேர்ந்த 211 மாணவர்களின் கற்றல் -கற்பித்தல் நடவடிக்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு உடனடியாக 800,000 ரிங்கிட்டை அங்கீகரிக்க வேண்டும்.
அவ்விரு பள்ளிகளும் நிதி கேட்டு கல்வி அமைச்சிடம் விண்ணப்பித்துள்ளன; ஆனால் இதுவரை பதில் இல்லை என லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஈராண்டுகளில் ஏழை மாணவர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியவர்கள் என சுமார் 1,100 பேருக்கு உதவுவதற்காக 906,425 ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
ஆனால், அவையனைத்தும் பொது மக்களின் நன்கொடை மற்றும் மாநில அரசின் நிதி உதவிகளை மட்டுமே நம்பி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் கீழ் இயங்குவதால் அறப்பணி வாரியத்துக்கு ஆண்டு தோறும் குறைந்தது 5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமென லிங்கேஷ் பரிந்துரைத்தார்.
20.19 பில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 2025 கூடுதல் வரவு செலவறிக்கை தொடர்பில் மேலவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய போது Dr லிங்கேஷ்வரன் அவ்வாறு கூறினார்.