
கோலாலம்பூர் , ஜூலை 1 – அண்மையில் சரவாக், கூச்சிங்கில் நடைபெற்ற போர்னியோ அனைத்துலக புத்தாக்க மற்றும் படைப்பாற்றல் போட்டி 2025-இல் பங்கேற்ற ஜோகூர், கோத்தா திங்கி மாவட்டத்தைச் சேர்ந்த மாடோஸ் (Ladang MADOS) தோட்டத் தமிழ்ப்பள்ளி பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.
ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி 29 ஆம்தேதிவரை நடைபெற்ற 15 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டியில் பள்ளியின் சிறந்த நடைமுறைகள் (Best Practices of School) அமலாக்கத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் குழுவிற்கு தங்கப் பதக்க விருது வழங்கப்பட்டது.
அதே சமயத்தில், சிறந்த நிலைத்தன்மை விருதுக்கான போட்டியில் பங்கேற்ற 170 பள்ளிகளில் மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 5வது இடத்திற்கு தேர்வுபெற்றது. இது தவிர சிறந்த தலைமைத்துவ விருதுப் பிரிவில் பள்ளியின் தலைமையாசிரியர் செல்வமணி, துணைத் தலைமையாசிரியர் செல்வகுமார் ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
சிறந்த கல்வியாளர் விருதுப் பிரிவில் ஆசிரியை தமிழ்ச்செல்வி – வெண்கல பதக்கம் வென்ற வேளையில் இணைப் பாட துணைத் தலைமையாசிரியர் பிரவீன் நாயுடு தங்கம் பதக்கமும் பள்ளிப் புத்தக போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சிவசங்கரி தங்கப் பதக்கம் வென்றனர்.
இதனிடையே, ஆசிரியர்களின் இந்த வெற்றி தமிழ்ப்பள்ளிகளின் தொலைநோக்கு மற்றும் எதிர்கால திட்டத்தற்காக பாடுபடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.