
புத்ராஜெயா, அக்டோபர் 28 –
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் அரசு உதவி பள்ளிகளின் கல்வியாண்டு அட்டவணை, ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
A குழு மாநிலங்களிலான கெடா, கிளந்தான், திரெங்கானு ஆகிய இடங்களிலிருக்கும் பள்ளிகள் அடுத்தாண்டு ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31 ஆம் தேதி நிறைவுருமென்று அறியப்படுகின்றது.
மேலும் B குழு மாநிலங்களிலான ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்களான கோலாலம்பூர், லாபூவான், புத்ராஜெயா ஆகிய இடங்களிலிருக்கும் பள்ளிகள் ஜனவரி 12இல் தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடைபெறும்.
கல்வியாண்டை மீண்டும் ஜனவரி மாதத்திற்குக் கொண்டுவரும் முயற்சி முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்களின் இயல்பான செயல்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்று அமைச்சு தெரிவித்தது.
மேலும், 2026வது கல்வியாண்டில் நோன்பு பெருநாள், சீனப் புத்தாண்டு, தீபாவளி, காமாத்தான் (Kaamatan Festival), காவாய் பெருநாள் மற்றும் கிறிஸ்துமஸ் தினம் போன்ற முக்கிய பண்டிகைகளின் விடுமுறை தேதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.



