
கோலாலம்பூர், ஆகஸ்ட்-7- 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், அதனை கட்டாயமாக சேர்க்குமாறு மலேசிய சிலம்பக் கழகம் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்பத்தை சிலாங்கூர் சுக்மாவில் இடம் பெற திட்டமிடப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு, அரங்கமும் தேர்வானது.
போட்டிக்கு 2,000 பேர் தயாராகியும் வருகின்றனர்; ஆனால், திடீரென சற்றும் எதிர்பாராமல் அதனை நீக்கியிருப்பது குறிப்பாக சிலம்ப வீரர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் எற்படுத்தியுள்ளதாக, சங்கத் தலைவர் Dr சுரஷ் கூறினார்.
கட்டாயம் இணைத்துக் கொள்வதாகக் கூறி விட்டு கடைசி நேரத்தில் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு ‘காலை வாரி விட்டது’ என, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் சொன்னார்.
கடந்தாண்டு நடைபெற்ற சரவாக் சுக்மாவில், சபா – சரவாக் உள்ளிட்ட 14 மாநிலங்கள் பங்கேற்றதோடு, 14 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள், 28 வெண்கலப் பதக்கங்கள் போட்டியிடப்பட்டன.
எனவே, இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சும், சிலாங்கூர் சுக்மா உச்சமன்றமும் தங்களின் முடிவை மீட்டுக் கொண்டு, சிலம்பத்தை மீண்டும் சேர்க்க வேண்டுமென சுரேஷ் வலியுறுத்தினார்.
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டி, ஆசியப் போட்டி, சீ போட்டி போன்ற முக்கிய விளையாட்டிப் போட்டிகளில் சிலம்பம் இடம் பெறவில்லை என்பதால், அது சுக்மாவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
உபசரணை மாநிலம் என்ற வகையில் சிலாங்கூருக்கு அம்முடிவை எடுக்க உரிமையுண்டு; எனவே அதை யாரும் இனவாதமாக ஆக்கக் கூடாது என, அமைச்சர் ஹானா இயோ முன்னதாகக் கூறியிருந்தார்.