
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-6- 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் Sukan Pilihan அல்லது ‘தேர்வு விளையாட்டாக’ கபடி சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. மலேசிய கபடி சங்கம் அந்த மகிழ்ச்சித் தகவலை உறுதிப்படுத்தியது.
இதனிடையே, கபடியை சேர்த்துக் கொள்ளச் சொல்லி கடிதம் எழுதி ஆதரவு தெரிவித்த அனைத்து மாநில விளையாட்டு மன்றங்களுக்கும், கபடி சங்கங்களுக்கும் இவ்வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக, மலேசிய கபடி சங்கத்தின் கௌரவச் செயலாளர் ASP அருள் பிரகாஷ் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இவ்விஷயத்தில் அனைவரும் காட்டிய ஒற்றுமையும் கடப்பாடும் இவ்வெற்றியை உறுதிச் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
கபடி விளையாட்டுக்குக் இந்த அங்கீகாரம் கிடைக்க வழிச் செய்த இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம், சிலாங்கூர் விளையாட்டு மன்றம் ஆகியவற்றுக்கும் அவர் நன்றி பாராட்டினார்.
சுக்மாவில் கபடி சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதன் வழி, இவ்விளையாட்டுக்கே ஒரு சிறந்த ஊக்கமாகவும், அடிமட்ட மற்றும் தேசிய மட்டங்களில் அதன் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகவும் உள்ளது.
தவிர, வலுவான மாநில அணிகளைத் தயார்படுத்தும் களமாகவும் இந்த சுக்மா 2026 விளங்குமென அருள் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கபடியோடு, e-sports , சதுரங்கம், கிரிக்கெட் ஆகிய 3 போட்டிகளும் சிலாங்கூர் சுக்மாவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.