
ஈப்போ, அக்டோபர்-1,
பேராக்கில் 2026 ஜனவரி 1 முதல் மின்சிகரெட் அல்லது vape விற்பனைக்கு உரிமங்கள் வழங்கப்படாது என, சுகாதாரத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இதன் மூலம், பெர்லிஸ், கெடா, ஜோகூர், பஹாங், திரங்கானு, கிளந்தான் ஆகியவற்றுக்கு அடுத்து, வேப் விற்பனையை தடை செய்யும் ஏழாவது மாநிலமாக பேராக் திகழ்கிறது.
விண்ணப்பங்கள் இவ்வாண்டு டிசம்பர் 31 வரை திறந்திருக்கும், ஆனால் அடுத்தாண்டு தொடங்கியதும் புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றார் அவர்.
தற்போதுள்ள உரிமங்கள் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும்; காலாவதியானதும் அவற்றை அவர்கள் புதுப்பிக்க இயலாது.
இதன் மூலம் அடுத்த 14 மாதங்களில் படிப்படியாக வேப் விற்பனை முழுமையாக நிறுத்தப்படும் என சிவநேசன் சொன்னார்.
வேப்பினால் ஏற்படும் நுரையீரல் காயங்கள் அல்லது EVALI தொடர்பில், பேராக்கில் 2015 முதல் 2023 வரை 44 சம்பவங்கள் பதிவாகின.
அதே காலக்கட்டத்தில், nicotine நச்சுப் பாதிப்பு தொடர்பில் 111 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டன.
தவிர, 2024 முதல் 2025 ஜூலை வரை, வேப்புடன் தொடர்புடைய தவறான போதைப்பொருள் பயன்பாட்டில் 42 பேர் கைதானதும் குறிப்பிடத்தக்கது.