
புத்ராஜெயா, பிப்ரவரி-20-அடுத்தாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க “இரட்டை குழு” மாணவர் சேர்க்கைக்குத் மலேசியா தயாராகி வருகிறது.
அப்போது, 6 மற்றும் 7 வயது குழந்தைகள் என பிரிவினருமே ஒரே நேரத்தில் முதல் வகுப்பில் சேரவுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை வரைக்குமான பதிவின் படி, 31,000-க்கும் மேற்பட்ட 6 வயது சிறுவர்கள் உட்பட மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் நாடு முழுவதும் முதலாமாண்டில் காலடி வைக்கவுள்ளனர்.
வரலாறு காணாத இந்த பெரும் சேர்க்கையை சமாளிக்க 4 அம்சத் திட்டங்களை கல்வி அமைச்சு வரைந்துள்ளதாக, அதன் தலைமை இயக்குநர் Dr Mohd Azam Ahmad கூறியுள்ளார்.
முதலில், ஆசிரியர்களையும் வகுப்பறைகளையும் அதிகரித்தல். புதிய ஆசிரியர்கள் தொழில்முறை பயிற்சியை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்.
இரண்டாவதாக, மாணவர்களை நெரிசல் மிகுந்த பள்ளிகளிலிருந்து குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு மாற்றுதல்.
மூன்றாவது, காலை- மாலை என இரு நேர வகுப்புகளை நடத்துதல்.
நான்காவது, வகுப்பறை கொள்ளளவை சீக்கிரமே விரிவாக்குதல்; அதோடு,
தொழில்துறைக்கான கட்டட முறையான IBS கட்டுமானம், தரமான கேபின் வகுப்பறைகள், மற்றும் சிறப்பு அறைகளை மாற்றி பயன்படுத்துதல் என அவர் சொன்னார்.
2027-ஆம் ஆண்டில் அறிமுகமாகும் புதிய பாடத்திட்டத்துடன் இணைந்து இந்த கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



