
கோலாலம்பூர், ஜூலை-26- அரசாங்கங்கள் அடுத்தடுத்து மாறினாலும் பூமிபுத்ரா நடுத்தர வர்க்கத்தின் உற்பத்தித்திறனை அவை மேம்படுத்தத் தவறிவிட்டன என, முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃவிசி ரம்லி கூறுகிறார்.
அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டதே தவிர, பூமிபுத்ரா நடுத்தர வர்க்கத்தை, சீன நடுத்தர வர்க்கத்தைப் போல உற்பத்தி ஆற்றல் மிக்கவர்களாகவும் துடிப்பானவர்களாகவும் மாற்ற இன்னும் நம்மால் முடியவில்லையே என ரஃவிசி ஏமாற்றம் தெரிவித்தார்.
மலாய் பாதுகாப்பின்மையின் மையத்தில் உள்ள ஒரு முக்கிய பிரச்னை இதுவென அவர் நம்புகிறார்.
பூமிபுத்ராக்களின் பங்கேற்பு மற்றும் பொருளாதார செயல்திறனை அதிகரிப்பதானது நீண்டகால வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இனப் பிளவுகளைக் குறைப்பதற்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் முக்கியமானது.
Yang Behenti Menteri எனும் தனது போட்காஸ் தொடரின் ஆகப் புதிய பேட்டியில், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அதனைத் தெரிவித்தார்.
பூமிபுத்ரா மக்கள் தொகை அதிகரிக்கும் போது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
இந்நிலையில் 2035 பூமிபுத்ரா பொருளாதார மாற்றத் திட்டம் மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்காமல் பொருளாதாரத்தில் பூமிபுத்ரா பங்களிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி உரிமையை அதிகரிப்பது அல்லது அனைத்து CEO-களும் மலாய்க்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போன்ற இன பாகுபாட்டை ஊக்குவிப்பது பற்றியது அல்ல என்று ரஃபிசி தெளிவுப்படுத்தினார்.
மாறாக, நியாயமான, நிலையான மற்றும் முடிவு சார்ந்த கொள்கைகளை உருவாக்குவதாகும் என்றார் அவர்.
பொதுத் தேர்தலுக்கு முன் பிரச்சார உரைகளை நம்புவதை விட, பொருளாதார இடைவெளியைக் குறைப்பதே அரசியல் நிலைத்தன்மைக்கு மிகவும் பயனுள்ள பாதை என, ரஃவிசி மேலும் கூறினார்.