
புக்கிட் ஜாலில், ஏப்ரல்-13, 2030 உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிச் சுற்றை 64 நாடுகள் பங்கேற்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் பரிந்துரையை, ஆசியக் கால்பந்து சம்மேளனமான AFC நிராகரித்துள்ளது.
CONMEBOL எனப்படும் தென்னமரிக்கக் கால்பந்து சம்மேளனத்தின் அப்பரிந்துரை, போட்டியின் அமைப்பையே சீர்குலைத்து விடுமென, AFC தலைவர் ஷேக் சல்மான் இப்ராஹிம் அல் கலிஃபா கூறினார்.
தவிர, போட்டி ஏற்பாட்டிலும் இரசிகர்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் குழப்பம் ஏற்படும் என்றார் அவர்.
“எனவே, ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி 48 நாடுகள் பங்கேற்பதே போதுமானதாக இருக்கும்; அதணை 64-ங்காக அதிகரித்தால், நாளையே இன்னொரு தரப்பு 132 நாடுகளை இறுதிச் சுற்றில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கும்” என கோலாலம்பூரில் நடைபெற்ற AFC-யின் 35-ஆவது ஆண்டு கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் ஷேக் சல்மான் பேசினார்.
இந்த 64 அணிகள் பங்கேற்கும் திட்டத்தை CONMEBOL தலைவர் பரிந்துரைத்திருந்தார்.
எனினும், அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA-வின் தலைவர் உள்ளிட்ட உலகக் கால்பந்தின் முக்கியப் புள்ளிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
2030 உலகக் கிண்ண இறுதிச் சுற்றை, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
அதே சமயம், 2030-ல் உலகக் கிண்ணம் நூற்றாண்டு விழா காண்பதால், அதனைச் சிறப்பிக்கும் வகையில், உருகுவே, அர்ஜேண்டினா, பராகுவே ஆகிய தென்னமரிக்க நாடுகளில் தொடக்க ஆட்டங்கள் நடைபெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.