தாய்லாந்து கம்போடியா மோதல்; மலேசியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், செப்டம்பர் 19 – தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு இடையிலான எல்லைத் தகராறு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, மலேசியா புதிய பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தாய்லாந்து ராணுவம் சுமார் 20 குடும்பங்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்காமல், தகராறான எல்லைப் பகுதியில் தடுப்புக் கம்பி மற்றும் சோதனைச் சாவடிகள் அமைத்து, கம்போடிய குடியிருப்பாளர்களை பல ஆண்டுகளாக வசித்து வந்த நிலத்திலிருந்து வெளியேற்றினர் என்று கம்போடிய அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில் கம்போடிய பிரதமர் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தாய்லாந்து வன்முறையையும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதையும் நிறுத்த வேண்டும் என்றும் இப்பிரச்சனையில் ASEAN உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, தாய்லாந்து தரப்பு, கம்போடியர்கள் சட்டவிரோதமாக தங்களது நிலப்பரப்புக்குள் நுழைந்ததாக தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியது.
தாய்லாந்து கம்போடியா இடையேயான இந்த எல்லை மோதல், இரு நாடுகளின் எல்லை வழியாக 800 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள பண்டைய கோவிலைச் சூழ்ந்த நீண்டகாலத் தகராறின் சமீபத்திய தொடர்ச்சி எனக் கூறப்படுகிறது.