
செப்பாங், அக்டோபர்-8,
காசா மனிதநேயப் பணியில் ஈடுபட்ட Global Sumud Flotilla (GSF) அமைப்பின் 23 மலேசியத் தன்னார்வலர்களும், நேற்றிரவு சுமார் 10.13 மணிக்கு பாதுகாப்பாக KLIA வந்தடைந்தனர்.
KLIA 1 முனையத்தில் அவர்களின் முகங்களை கண்டதும், அங்குக் குழுமியிருந்த குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்தில் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாலஸ்தீன கொடிகள், பதாகைகள் மட்டுமின்றி “பாலஸ்தீனம் வாழ்க”, “காசா வாழ்க” போன்ற முழக்கங்களால் விமான நிலையமே அதிர்ந்த
கிட்டத்தட்ட 1 வாரம் இஸ்ரேலியப் படைகளின் பிடியிலிருந்து தப்பி வந்த சந்தோஷத்தில், ஆனந்த கண்ணீரில் குடும்பத்தாரையும் குழந்தைகளையும் கட்டியணைத்து அவர்கள் வெளிப்படுத்தினர்.
இஸ்ரேலியப் படைகளால் விடுவிக்கப்பட்டதையடுத்து, துருக்கியேவின் இஸ்தான்புல் நகரத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பியவர்களை, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் எதிர்கொண்டு வரவேற்றார்.
தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்டோரும் அவர்களை வரவேற்க வந்திருந்தனர்.
இந்த 23 பேரும் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதை, மலேசியா ஒரு முக்கியமான தூதரக வெற்றியாகக் கருதுவதாகக் கூறிய டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான், அம்முயற்சியை சாத்தியமாக்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துருக்கியே அரசாங்கம் உள்ளிட்ட தரப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில் மலேசியத் தன்னார்வலர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவித்தன.
பொது மக்களும் சமூக வலைத்தளங்களில் நன்றி தெரிவித்து, துருக்கியே அரசின் ஒத்துழைப்புக்கும் மலேசிய தூதரகத்தின் துரிதமான நடவடிக்கைக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
GSF மனிதநேயப் பணியில் இம்முறை 45 நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அனத்துலகத் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அவர்கள் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி, இஸ்ரேலின் தடைகளை எதிர்த்து அமைதியான முயற்சி ஒன்றை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.