
கோலாலம்பூர், மார்ச் 20- இம்மாதம் 16 ஆம் தேதி தொடங்கிய, மூன்று நாள் நோன்பு பெருநாள் சாலை பாதுகாப்பு நடவடிக்கையின் போது JPJ எனப்படும் சாலை போக்குரத்துத்துறை டுரோன்களைப் பயன்படுத்தி 2,384 போக்குவரத்து குற்றங்களைப் பதிவு செய்துள்ளது.
சாலை விபத்துகளுக்குக் காரணமாக அடையாளம் காணப்பட்ட நான்கு முக்கிய விதிமீறல்கள் இவற்றில் அடங்கும் என சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் கிப்லி மா ஹசான் ( Muhammad kifli Ma Hassan ) தெரிவித்தார்.
இரட்டைப் பாதைகளில் முந்திச் செல்லுதல், போக்குவரத்து சமிக்ஞைகளை மீறுதல், வரிசையில் குறுக்கிட்டுச் செல்லுதல் அல்லது இடதுபுறமாக வாகனங்களை முந்திச் செல்லுதல், மற்றும் அவசரப் பாதையைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்கள் இதில் அடங்கும்.
இரட்டைப் பாதைகளில் முந்திச் செல்வது தொடர்பாக அதிகப்பட்சமாக 715 குற்றங்களும், போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமல் சென்றதற்காக 627 குற்றங்களும் பதிவாகின.
இதற்கிடையில், கிள்ளான் பள்ளத்தாக்கு, கிளந்தான் மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குற்றம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டு 15 நாட்களுக்குள் அபராதம் செலுத்துபவர்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடியாக 150 ரிங்கிட் விதிக்கப்படும் என முகமட் கிப்லி சுட்டிக்காட்டினார்.



