
கலிஃபோர்னியா, மார்ச்-15 – 66 வயதில் 1 மில்லியன் டாலர் சம்பளத்தில் அமெரிக்காவின் பிரபல கணினி சில்லு தயாரிப்பு நிறுவனமான இன்டெலின் புதியத் தலைமை செயலதிகாரியாக (CEO), மலேசியாவில் பிறந்தவரான Lip-Bu Tan நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோகூர், மூவாரைச் சேர்ந்த அந்த மூத்த தொழில்துறை ஜாம்பவானின் நியமனம் மார்ச் 18-ஆம் தேதி அமுலுக்கு வருகிறது.
தடுமாறும் நிலையிலிருந்து, ஒரு வெற்றிகரமான கணினி சில்லு உற்பத்தி மற்றும் வடிவமைப்பு நிறுவனமாக இன்டெலை மாற்றுவதே அவருக்கு இடப்பட்ட பணியாகும்.
அதற்காக Tan-க்கு 1 மில்லியன் டாலர் அடிப்படை மாதச் சம்பளத்தோடு, வருடாந்திர போனஸாக 2 மில்லியன் டாலர் வரையிலும் வழங்கப்படுமென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வளர்ந்து இயற்பியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த Tan பின்னர் அமெரிக்கா சென்று வணிக நிர்வாகத்திலும் அணுக்கருப் பொறியியல் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இன்டெலில் இணைவதற்கு முன், Tan,
Walden International நிறுவனத்தின் தோற்றுநர் ஆவார்.
Cadence Design Systems நிறுவனத்தின் CEO-வாகவும் பணியாற்றி, அதனை இலாபகரமாக மாற்றிய பெருமையும் இவருக்குண்டு.
Tan-னுக்கு கடும் சவால் காத்திருந்தாலும், அவரின் நியமனம் முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இன்டெலின் பங்கு மதிப்பும் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இன்டெலின் CEO-வாக Tan-னின் நியமனம் ஒரு சிறந்த தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மலேசியர்களுக்கே உத்வேகமாக உள்ளது.
மலேசியர்களும் உலக அளவில் வெற்றியை அடையும் திறன் கொண்டவர்கள் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.